Friday 3 August 2012

"சூரிய ஒளி விலகல்' நிகழ்வை கண்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மக்கள் வியப்பு


கோவை: ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த, "சூரிய ஒளி விலகல்' வானியல் நிகழ்வு, மக்களிடம் ஆச்சரியம், பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை, 11.00 மணிக்கு, சூரியனைச் சுற்றி, பெரிய ஒளி வட்டம் காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்திய நிலையில், இந்த நிகழ்வு, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. "பெரும் புயல்' வரக்கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு வதந்திகளும், கருத்துக்களும் இந்த நிகழ்வை ஒட்டி பரவின. குறிப்பாக, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் இந்த நிகழ்வு பற்றிய தகவல் பரவியது. காலை, 11.00 மணிக்கு துவங்கி, மதியம், 2.30 மணி வரை காணப்பட்ட இந்த வானியல் நிகழ்வு, மழைப் பொழிவு தள்ளிப் போவதற்கான முன்னோட்டம் என்கின்றனர், அறிவியல் அறிஞர்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் லெனின் பாரதி கூறியதாவது: நேற்று சூரியனைச் சுற்றி காணப்பட்ட ஒளிவட்ட நிகழ்வுக்கு, சூரிய ஒளி விலகல் அல்லது ஒளி வட்டம் (சன் ஹாலோ) எனப் பெயர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள பிரதேசங்களில் மட்டும், இந்த ஒளி வட்டம் நேற்று தெரிந்துள்ளது. சாதாரண கண்களில், 22 டிகிரி கோணத்தில் இந்த ஒளிவட்டம் தெரியும். மேகக் கூட்டங்கள், அதிக உயரத்திற்குச் செல்லும் போது, இந்த நிகழ்வு நடக்கும். நேற்று, 8,000 அடி உயரத்திற்கு மேகக் கூட்டங்கள் சென்றதுடன், ஈரப்பதம், பனித்துகள்கள் மற்றும் தூசுகள், சூரியக் கதிர்களில் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த வானியல் நிகழ்வு நடந்துள்ளது.

மேகக் கூட்டங்கள் அடர்த்தியாக இல்லாமல் பரவலாவது, இந்த நிகழ்விற்கு முக்கிய காரணம். இரண்டு வாரங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம் சென்னிமலை பகுதியில் இந்த நிகழ்வு மக்களுக்கு தெரிந்தது. வானவில் நிகழ்வு கோட்பாடு அடிப்படையிலேயே, இந்த நிகழ்வும் நடக்கிறது. நேற்றைய ஒளி வட்டத்தில் சிவப்பு நிறம் உட்புறத்திலும், வெளிப்பக்கம் நீல நிறத்திலும் காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் பரவலாகியுள்ளதால், மழைப் பொழிவு காலதாமதம் ஆவதை இது காண்பிக்கிறது. இவ்வாறு லெனின் பாரதி தெரிவித்தார்.

தென்மண்டல அறிவியல் மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: சூரியனுக்கும், பூமிக்கும் இடையே, 15 கோடி கி.மீ., தூரம் உள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, வளி மண்டலத்தில் உள்ள சின்னச் சின்ன நீர் திவலைகள், சூரியனை விட்டு விலகும். அப்போது, நீர் திவலைகள், முப்பரிமாண கண்ணாடி போல் செயல்பட்டு, சூரியனிலிருந்து வெளிவரும் ஒளியை பிரதிபலிப்பதால், சூரியனைச் சுற்றி இத்தகைய வட்டம் காட்சி அளிக்கும். "சன் ஹாலோ' என்று இதை அழைப்பர். நமது வளி மண்டலத்தில் இத்தகைய நிகழ்வு அடிக்கடி நிகழும். இதனால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு தான். இவ்வாறு அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
*News From http://www.dinamalar.com

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More