Monday 6 August 2012

முதல்வர் அலுவலக உத்தரவுகள் கிடப்பில் :மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்


விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகார் மனுக்களை, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரமைப்பு சட்டப்படி, விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டிய பொறுப்பு சி.எம்.டி.ஏ., வுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதில் குறிப்பிட்ட அளவு அதிகாரங்களை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த பகிர்வுக்கு மேலும், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளது. ஆனால், தங்களுக்கு வரும் புகார்களை, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்புவதை மட்டுமே சி.எம்.டி.ஏ., செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன. இந்த புகாரை உறுதிப்படுத்தும் விதமாக, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் சமீபத்திய செயல்பாடு அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு...
பல புகார்களில் ஒன்றாக, சென்னை முகப்பேர், கோல்டன் காலனி பகுதியில் மனை எண், 1,280ல், அனுமதி இன்றி, நகரமைப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக கூடுதல் தளங்கள் கட்டப்படுவதாக, சி.எம்.டி.ஏ., வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஏன் இடிக்கக்கூடாது என, "நோட்டீஸ்' மட்டும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இதற்கு மேல், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, கடந்த பிப்ரவரியில் புகார் மனு அனுப்பியிருந்தனர்.
அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல் கட்டடம் தொடர்பாக, இடிப்பு நடவ டிக்கை எடுக்குமாறு, முதல்வரின் தனிப் பிரிவின் சிறப்பு அலுவலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால், இந்த கட்டடம் மாநகராட்சியின் அதிகார வரம்புக்குள் வருவதாகக் கூறி, ""1919ம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் சட்டப்படி, சம்பந் தப்பட்ட கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பியது.
கிடப்பில்...
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த இந்த கடிதம் மட்டுமல்லாது, விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக
வந்த ஏராளமான புகார்
கடிதங்கள், மாநகராட்சிக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன.
ஆனால், அவற்றின் மீது மாநகராட்சி கமிஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆள் பற்றாக்குறை
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக வரும் புகார்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
போதிய எண்ணிக்கையில் இதற்கான பணியாளர்கள் இல்லாதது, இருக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை போன்ற காரணங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சி.எம்.டி.ஏ., அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் அலுவலக அறிவுறுத்தலுடன் வந்த புகார் மனுக்களுக்கே இந்த நிலை என்றால், மற்ற புகார்கள் மீது என்ன நடவடிக்கை இருக்கும் என்பது தான், இப்போது எழுந்துள்ள கேள்வி.


*News From http://www.dinamalar.com(06-Aug-2012)
http://www.makkalsanthai.com/





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More