Monday 10 September 2012

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி : தலைவர்கள் கருத்து


கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தலைவர் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.




நாராயணசாமி குற்றச்சாட்டு :

கூடங்குளத்தில்,144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் கூடியது சட்ட விரோதமானது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் போராட்டக்காரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பழ.நெடுமாறன் கண்டனம் : 

போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியது கொடுமையானது என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் நியாயமான சந்தேகங்களை போக்க எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையம் தொடர்பாக அரசு சட்டப்படியான குழுவை அமைக்கவில்லை எனவும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

ஞானதேசிகன் கேள்வி :

அணுஉலையை தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பெண்கள் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது எந்தவகையில் நியாயம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை மிரட்டி போராட்டத்தில் ஈடுபட வைப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

எந்தப் பிரச்னையையும் வன்முறை மூலமாகவோ, ஒடுக்குமுறை மூலமாகவோ தீர்த்துவிட முடியாது என்பதை சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்வுகளிலிருந்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மிதிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும்வரை அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ:

இந்தியாவில் 21 அணுஉலையிலிருந்து 2.7% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது என்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்திவிட்டு சூரியசக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்:

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More