Monday 10 September 2012

என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் போராட்டக்காரர்கள் சூளுரை!


கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், இடிந்தகரையில் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் அணு‌உலையை மூடாமல் ஓயமாட்டோம் என போராட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.




தாக்குதலை கண்டித்து போராட்டம் : 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் : 

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு என்ற இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டில்லியிலும் போராட்டம் :

அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தலைநகர் டெல்லியிலும் எதிரொலித்தது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம்  : 

மீனவ மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாலைமறியல் நடைபெற்றது.
நேற்றைய தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைநகரங்களில் 17 அமைப்புகள் சார்பில் இன்று  போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.
*News from puthiyathalaimurai.tv(11 September 2012 )

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More